Wednesday, March 26, 2008

உயிரூட்டியவளுக்காக…


யார் யார் பற்றியோ
எதை எதை பற்றியோ
கவி எழுதிய நான்
எனைப் பிரசவித்து
பிரபஞ்சத்தில் பிரவேசிக்கச் செய்த
உனைப் பற்றிக் கவி எழுத எத்தனித்து எழுதினேன்

மகப்பேறு பெற
மறு ஜென்மமெடுத்து
மண்ணில் மலரச் செய்தாய் என்னை

நான் இன்றும் இல்லம் சேர்ந்தால்
தெருவில் வானவில் தரை இறங்கியதாய் தோன்றும்
நீ தீட்டும் கோலம் முதல்
சமைக்கும் சாப்பாடு வரை
அனைத்தும் என் விருப்பமே
நான் இல்லாத நாட்களில்
அனைத்தும் அப்பாவின் அபிப்ராயமாகிறது
ஒரு நாளையும் உனக்காக ஒதுக்க மறுக்கிறாய்

பெயரில் மட்டுமே சிங்காரம் பெற்ற சென்னையிலிருந்து
ஸ்ரீமுஷ்ணம் வருகையில்
வீட்டில் தடம் பதிக்க தாமதம் ஐந்து நிமிடமானாலும்
வீட்டின் முற்றத்தின் முன் அமர்ந்து
வழி மேல் விழி வைக்கிறாய் என் வரவுக்காக

வடிவான உன் வதனம் வாட வார்த்தைகள் வார்த்துள்ளேன்
வசை மொழியொன்றும் வீசியதில்லை நீ

ஆயிரம் முறை சண்டையிட்டாலும்
அதிகமாகித் தான் போனது
என் மீதான உன் அன்பு

மழையில் மீன் பிடித்தேன்
மறுநாள் கூடாதென மிரட்டினாய்
மதிக்காமல் மீறினேன்
அடிப்பதாய் அதட்டினாய்
அன்பில்லையென அழுதேன்
அன்றிரவு அண்டிய
காய்ச்சலின் கடுமை கற்பித்தது
அதட்டலில் அமைதியாய் அமர்ந்திருந்த அன்பை

பற்றிய பிணியும் பறந்து விடுகிறது
நெற்றி பற்றும் உன் ஸ்பரிசத்தில்

தேள் கொட்டிய தருணத்தில்
வலியின் வேதனையிலும்
கண்களில் களிப்பையே காட்டுகிறாய்
தேள் தீண்டியது எனை அன்று உனையென்று

கலங்காத என் கண்களே கண்ணீரில் நனைந்தன
உன் கண்களில் கண்ணீர் கண்ட போது

பரீட்சை நாட்களில்
படிக்க நான் விழிக்க
நீ தூக்கம் தொலைத்தாய்

என் பெயர் பொறியியல் பட்டம் பெறுவதற்குள்
பத்திரமாய் நீ வைத்திருந்த
அணிகள் அனைத்தும்
அடகு கடையில் ஐக்கியமானது
இப்படி நீ எனக்காக
இழந்தது ஏராளம்

கல்லூரியில் நான்
உன் கனவிலும் நான்
கனவில் எனக்கு விபத்தென்றவுடன்
விரைந்தோடி வந்து
விடிந்தும் விழிக்காத
என் முன் விழித்திட்டாய்

தோல்வியடைந்து துவண்ட நாட்களில்
இதுவும் கடந்து போகுமென எனக்குத் துணிவூட்டினாய்

இரு நாள் ஒரு உணவகம் சென்றால்
மறு நாள் சுவை சலிப்பதால் முகம் சுளிக்கிறேன்
23 வருடங்கள் ஆகின
இன்றும் உமிழ் வழிகிறது உதடுகளில்
உன் உணவைக் கண்டால்

உயிர் காக்கும் ஜீவன் பல இருப்பினும்
எனக்காக உயிர் கொடுக்கும் ஜீவன் ஒன்றிருப்பின்
அது நீ தான்


அதிர்ஷ்டம் அடைந்தவளே அண்ணி
மருமகளை மகளாய் பார்க்கும்
அத்தை - தவறு
அம்மா அமைந்ததற்கு

தோள் சாய்ந்து தூங்கும் அன்று முதல்
தோள் தொட்டு பேசும் இன்று வரை
தவறாமல் தொடர்கிறது
எனக்கான உன் தொழுகை

நித்தம் நித்தம்
நீ என்னை நினைப்பதில்லை
காரணம் - மறப்பதே இல்லை

தரணியில் தெய்வமொன்று இருப்பின்
அது தாய் என்பேன் -இல்லை இல்லை
நீ என்பேன்

பட்ட கடன் தீர்க்க
மறுஜென்மத்தில்
மலர்ந்திடு என் மகளாய்...

Tuesday, March 11, 2008

என் அவள்...


வல்லிய என் விரல்களும்
வலிமை இழந்து போகின்றன
அவளின் மெல்லிய விரல்கள்
என் விரல்களின் இடையில் இடம் பிடிக்கையில்

அவள் தோள் சாய்ந்து
நித்திரை கொள்கையில்
மென்மையின் மென்மை உணர்கிறது மேனி

அவளைக் கண்டால்
குழம்பியிருக்கும் மனமும் குழந்தையாகிறது

சினம் வழியும் விழியும் சாந்தமடைகிறது
என் கன்னமும் அவள் உதடும் உறவு கொள்கையில்

அவள் உதடுகள் உதிர்க்கும் புன்முறுவலில்
புதைகிறது என்னுள் படர்ந்த சோகம்

அவள் தத்தி தத்தி நடக்கும் நடையிலும்
அழகாய் மொழியும் மழலையிலும்
மனதில் மண்டிய கவலை மறைந்து
மகிழ்ச்சி மலர்கிறது

அடிப்பதாய் நினைத்து
அழகாய் அவள் தொடுவதில்
வலிப்பதாய் நான் செய்யும் பாசாங்கில்
மலரும் புன்னகையில்
மறந்துதான் போகிறேன்
அவள் என் மகளென்பதையே..

Tuesday, March 4, 2008

நீயும் மகாத்மா...



சேய்யுடன் பேருந்தில் ஏறிய
தாய்க்கு இடமளிக்கும் போது

பார்வையற்றவர் பாதையை கடக்க
நீ அவரது பார்வையாகும் போது

விபத்துக்குள்ளாகியவனை விநாடியில்
மருத்துவமனை சேர்க்கும் போது

முகம் அறியா மனிதனுக்கு
அகம் உவந்து இரத்ததானம்
செய்யும் போது

எங்கோ நடந்த பூகம்பத்தில்
இறந்த இழந்த மக்களுக்காக
இங்கு நீ மனமிரங்கும் போது

நம் நாட்டு போர் வீரர்களுக்காக
கண்களில் கண்ணீர் கசியும் போது

நீயும் மகாத்மா தான்...