உன்னால் என்னுள் என்னால் உன்னுள்
கலந்த களங்கமற்ற நட்பென்ற உணர்வுக்கு
இங்கே கவிதையால் உயிர் கொடுக்கிறேன்
உதிரி உதிரியாய் உன்னைப் பற்றி சேர்த்து வைத்த
உணர்வுகளை இங்கே ஒருங்கிணைத்துள்ளேன்
பெண்களை தொட கூச்சப்பட்டு குறுகிய என் கைகளும்
இன்று உன்னுடன் கலந்த பிறகு
ஏனோ தெரியவில்லையடி உன்னை அடிக்கவும் அஞ்சவில்லை
சில முறை என்னை நிந்திக்கிறேன்
பெண்ணாக பிறக்காமல் போனதற்கு
பல முறை சிந்திக்கிறேன்
நீ மட்டும் ஆணாக பிறந்திருந்தால்
என் அண்மையில் இருந்திருக்கலாமென்று
பால் கொண்ட பிரிவினை மட்டுமே
நம்மை பிரித்துள்ளது
யாரறிவா, அப்பிரிவினையே இவ்வுணர்வுக்கு ஊக்கமளித்திருக்கலாம்
உன்னை ஏராளமாய் ஏளனம் செய்திருக்கிறேன்
சிறிதளவு சினம் வழிந்ததில்லை உன் விழிகளில்
இமியளவும் இன்சொல் உச்சரித்ததில்லை உன் உதடுகள்
உன்னை நிலவென்று வர்ணித்து
வர்ணம் பூச எண்ணமில்லை எனக்கு
ஏனெனில், அது உயிரற்ற உணர்வறியா உருண்டை
நீயோ என் உள்ளமறிந்தவள்
கேலியாக புனை பெயர்கள் பல புனைந்த போதிலும்
புன்னகை மட்டுமே தவழ்ந்தது உன் இதழ்களில்
என்றும் வெளிவரா என்னுள் உள்ள ரகசியங்கள்
உன்னுள் மட்டும் புதைகின்றன
என் வாழ்நாள் முழுவதும் - இல்லை
உன் வாழ்நாள் முழுவதும் - வேண்டாம், வேண்டாம்
நம் வாழ்நாள் முழுவதும்

1 comment:
good with nice feel
Post a Comment