Tuesday, February 26, 2008

யார் ஊனம்?



பேருந்தில் ஓர் காலில்லாமல்

ஏறிய இளைஞன்

அவனுக்கு இருக்கை ஈய்ய

மனமில்லா மாக்கள்

இதில் நான் அவனைப் பார்த்து

பரிதாபப்படுவதா, இல்லை

அவர்களை பார்த்து

பரிகாசம் செய்வதா

வியந்து நின்றேன்

இவர்களில் யார் ஊனமென்று!

Monday, February 25, 2008

நட்பின் உருவம்...


சிந்தனையில் சிற்பியாகி
நட்புக்கு ஒரு வடிவம் வடித்தேன்
வந்தது நல்ல வடிவம் மட்டுமல்ல
என் நண்பனின் உருவம்

Friday, February 22, 2008

கல்லூரி...


சிந்தனையை சற்று பின்னோக்கி செலுத்துவோம்
முதன்முதலில் முகம் மலர
ஆகஸ்ட் 13ஆம் நாள் கல்லூரி நுழைந்தோம்
முதலாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

இனிமையான இரண்டாம் ஆண்டில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

சுற்றுலா சென்று சுகம் கண்ட மூன்றாம் ஆண்டில்
மூன்றாம் ஆண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

நமக்குள் உள்ள நட்பு இறுகி
நாட்கள் விநாடிகளாக கழிந்த நான்காம் ஆண்டில்
இறுதியாண்டு மாணவர்கள் எனப்பட்டோம்

இப்படி அடுத்தடுத்து எங்கள் முகவரி மாறியது
இறுதியாண்டின் இறப்பிற்கு பிறகு
எங்கள் கல்லூரியைப் பொருத்தவரை
முன்னாள் மாணவர்கள் என்ற முத்திரையே
எங்கள் முகவரியாய் நிலைத்திருக்கும் - எங்கள் நட்பைப் போல்

மாறாத நட்பு...


இந்த நான்கு வருடமும் கல்லூரியில் உள்ள
மரங்கள், சாலைகள், விடுதியறை, வகுப்பறை
நமக்குச் சொந்தமென்று இருந்தோம்
இறுதியாண்டின் இறுதியில் தெரிந்தது
அவை அடுத்த நான்கு வருடத்தில் வேறொருவருக்குச் சொந்தமென்று
இனி என்று கிடைக்கும் வகுப்பறையின் வாசனை நுகரும் வாய்ப்பு
இப்பொழுது உணர்கிறேன் உண்மையை
இந்த உலகில் மாற்றமொன்றே மாறாதது
ஒன்றைத் தவிர - நமது நட்பு

Wednesday, February 20, 2008

தோழி, உனக்காக சில நிமிடங்கள்...



உன்னால் என்னுள் என்னால் உன்னுள்
கலந்த களங்கமற்ற நட்பென்ற உணர்வுக்கு
இங்கே கவிதையால் உயிர் கொடுக்கிறேன்

உதிரி உதிரியாய் உன்னைப் பற்றி சேர்த்து வைத்த
உணர்வுகளை இங்கே ஒருங்கிணைத்துள்ளேன்

பெண்களை தொட கூச்சப்பட்டு குறுகிய என் கைகளும்
இன்று உன்னுடன் கலந்த பிறகு
ஏனோ தெரியவில்லையடி உன்னை அடிக்கவும் அஞ்சவில்லை

சில முறை என்னை நிந்திக்கிறேன்
பெண்ணாக பிறக்காமல் போனதற்கு
பல முறை சிந்திக்கிறேன்
நீ மட்டும் ஆணாக பிறந்திருந்தால்
என் அண்மையில் இருந்திருக்கலாமென்று

பால் கொண்ட பிரிவினை மட்டுமே
நம்மை பிரித்துள்ளது
யாரறிவா, அப்பிரிவினையே இவ்வுணர்வுக்கு ஊக்கமளித்திருக்கலாம்

உன்னை ஏராளமாய் ஏளனம் செய்திருக்கிறேன்
சிறிதளவு சினம் வழிந்ததில்லை உன் விழிகளில்
இமியளவும் இன்சொல் உச்சரித்ததில்லை உன் உதடுகள்

உன்னை நிலவென்று வர்ணித்து
வர்ணம் பூச எண்ணமில்லை எனக்கு
ஏனெனில், அது உயிரற்ற உணர்வறியா உருண்டை
நீயோ என் உள்ளமறிந்தவள்

கேலியாக புனை பெயர்கள் பல புனைந்த போதிலும்
புன்னகை மட்டுமே தவழ்ந்தது உன் இதழ்களில்

என்றும் வெளிவரா என்னுள் உள்ள ரகசியங்கள்
உன்னுள் மட்டும் புதைகின்றன

என் வாழ்நாள் முழுவதும் - இல்லை
உன் வாழ்நாள் முழுவதும் - வேண்டாம், வேண்டாம்
நம் வாழ்நாள் முழுவதும்
நாம் கொண்ட சிநேகத்தை சிநேகிப்போம்...